"உடல் எடையை குறைக்க Easy வழி" யூடியூபில் பேசிய டாக்டரை நம்பிய இளைஞர்.. உயிரை பறித்த ஆப்ரேசன்...

உடல் பருமனை குறைக்க, சென்னையில் அறுவை சிகிச்சை செய்த புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனை குறைப்பது சாத்தியமா? தவறான சிகிச்சை மூலம் இளைஞர் உயிரிழந்தாரா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

Apr 25, 2024 - 12:21
"உடல் எடையை குறைக்க Easy வழி" யூடியூபில் பேசிய டாக்டரை நம்பிய இளைஞர்.. உயிரை பறித்த ஆப்ரேசன்...

இந்த நவீன காலத்தில், இளைஞர்கள் பலரும் உடல் பருமனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தற்போது சிறு வயதிலேயே பள்ளி மாணவ, மாணவிகள் என பலதரப்பினரும் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் பருமனை குறைக்க பலரும் நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா, நடனம் மற்றும் டயட் போன்ற பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சிலர் குறுகிய காலத்தில் உடல் பருமனை குறைக்க ஆசைப்பட்டு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, உடல் பருமனை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற அறுவையின்போது சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த 2017-ல், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் உடல் பருமனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 26 வயது இளைஞரான ஹேமசந்திரன், உடல் எடையை குறைக்க சென்னையில் பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

புதுச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்த செல்வநாதன் என்பவரின் மூத்த மகன் ஹேமசந்திரன். 156 கிலோ எடை கொண்ட இவர், உடை எடை குறைப்பது குறித்து தீவிரமாக யோசித்து வந்துள்ளார். அப்போது, உடல் எடையை ஈசியா குறைக்கலாம் என்று யூடியூப்பில் உத்தரவாதம் அளித்த சென்னை தனியார் மருத்துவமனையின் மருத்துவர் பெருங்கோவின் வீடியோவை பார்த்து, உடல் எடையை குறைக்க வேண்டும் என ஹேமசந்திரன் முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து ஹேமசந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவர் பெருங்கோவை சந்தித்தபோது, சுமார் 8 லட்சம் வரை செலவாகலாம் என மருத்துவர் தரப்பில் கூறியுள்ளனர். இதையடுத்து, குறைவான செலவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கேட்டு கொண்ட நிலையில், தனது உதவியாளர் தொடர்பு கொள்வார் என பெருங்கோ கூறிய நிலையில், மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போதே மற்றொரு செல்போன் எண்ணிலிருந்து அழைத்த நபர், இதே மருத்துவர் பம்மலில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் முன்றரை லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்வார் என கூறியுள்ளார்.

இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி அவர் குறிப்பிட்ட மருத்துவமனையில் ஹேமசந்திரன் அனுமதிக்கப்பட்ட நிலையில், 22ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. தனது மகனின் உடல் எடை குறைந்துவிடும் என்ற கனவோடு பெற்றோர் காத்திருந்த நேரத்தில், 45 நிமிடங்களில் வெளியே வந்த மருத்துவர் பெருங்கோ, ஹேமசந்திரனின் உடல் அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறி, தான் பணிபுரியும் பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இந்த நிலையில், அங்கு மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த ஹேமசந்திரன் உயிரிழந்துள்ளார். 

இதைத் தொடர்ந்து, மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான், ஹேமசந்திரன் உயிரிழந்ததாக, அவரது தந்தை செல்வநாதன், பம்மலில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.