சென்னையில் மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் தெரியுமா?

சென்னையில் வரும் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு

Apr 5, 2024 - 16:37
சென்னையில் மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் தெரியுமா?

சென்னையில் நடைபெறும் மா.அரங்கநாதன் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சில், இந்தாண்டு மூத்த தமிழறிஞர்கள் தெ.ஞானசுந்தரம் மற்றும் கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு இலக்கிய விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளரான மா.அரங்கநாதன் பெயரிலான விருதுகளை ஆண்டுதோறும் முன்றில் இலக்கிய அமைப்பு வழங்கி வருகிறது. ஆண்டுக்கு இரு இலக்கிய ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களது பணிகளைச் சீர்தூக்கிப் பார்த்து, கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் மற்றும் எழுத்தாளர் கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுபெரும் தமிழறிஞரும், மு.வரதராசனாரின் மாணவருமான தெ.ஞானசுந்தரம், வைணவ உரை வளம் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித்துறையிலும் பணியாற்றியவர். அதேபோல், கு.வெ.பாலசுப்பிரமணியன் என்று அழைக்கப்படும் கும்பகோணம் வெங்கடாசலம் பாலசுப்பிரமணியன், கவிதை, கதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, கற்பித்தல் எனப் பலதுறைகளில் சிறந்த பணிகளைச் செய்தவர். இவர்கள் இருவருக்கும் மா.அரங்கநாதன் விருது வழங்கப்படவுள்ளது. 

சென்னையில் வரும் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறும் இந்த விழாவில், மா.அரங்கநாதனின் மகன் நீதியரசர் ஆர். மகாதேவன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மா.அரங்கநாதன் படைப்புகள் மற்றும் பொருளின் பொருள் கவிதை ஆகிய நூல்களும் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow