கழிவுநீர் கால்வாயில் கிடந்த பெண் சிசு... அதிர்ச்சியில் மதுரை... வீசியது யார்? விசாரிக்கும் போலீஸ்

மதுரையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை, கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

May 8, 2024 - 18:06
கழிவுநீர் கால்வாயில் கிடந்த பெண் சிசு... அதிர்ச்சியில் மதுரை... வீசியது யார்? விசாரிக்கும் போலீஸ்

மதுரை மாநகரின் முக்கிய பகுதியான பெத்தானியாபுரம் குடியிருப்பு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள செபாஸ்டின் நகர் சர்ச் அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்,  இதுகுறித்து கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 
 
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண் குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கான 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், காலை 10 மணிக்கு மேல், குழந்தையை கழிவுநீர் கால்வாயில் வீசியிருக்கலாம் என்றும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும், அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகள் விவரம், சமீபத்தில் பிரசவித்த பெண்கள் விவரம் ஆகியவற்றை சுகாதாரத்துறையிடம் கேட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். 

மதுரை உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 80களின் இறுதியில் பெண் சிசுக்கொலை என்பது மிகவும் அதிகமாக இருந்த சூழலில், தமிழக அரசின் சார்பில், 1992ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் பெண் சிசுக்கொலை என்பது பெருவாரியாக குறைந்தது. 

இந்த நிலையில், தற்போது அரங்கேறியுள்ள இந்த சம்பவம், மீண்டும் அங்கு பெண் சிசுக்கொலை என்பது அதிகரிக்கிறதா என்ற கேள்விகளை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow