கையும் களவுமாக சிக்கிய நில அளவையர்...! சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்..

May 7, 2024 - 09:00
கையும் களவுமாக சிக்கிய நில அளவையர்...! சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்..

ராமநாதபுரம் அருகே லஞ்சம் கேட்ட நில அளவையரை கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்த அதிகாரிகளின் செயல் அப்பகுதியில் பாராட்டை பெற்றுள்ளது.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திருநாவுக்கரசுவின் மனைவி தாமரைச் செல்விக்கு பூர்வீக சொத்தில் இருந்து சுமார் 8.5 செண்ட் நிலம் பாகமாக கொடுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு பட்டா உட்பிரிவு செய்ய இ-சேவை மூலமாக மனு செய்து ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தை பலமுறை நாடியுள்ளார் திருநாவுக்கரசர். மேலும், நிலத்தை அளவீடு செய்து அதன் அறிக்கையை கணினி மூலம் பதிவேற்றம் செய்ய சம்பந்தபட்ட பகுதி  நில அளவையர் சிவா என்பவரை சந்தித்து முறையிட்டனர். 

அப்போது நிலத்தை அளவீடு செய்து, கணினியில் பதிவேற்றம் செய்ய மேல் அதிகாரிகளை தனியாக கவனிக்க வேண்டும் என்றும் அதற்காக ரூ.3,500/- பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். அப்போது தான் வேலையை விரைந்து முடிப்பேன் என திருநாவுக்கரசரிடம் நில அளவையர் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் பணம் கொடுக்க விரும்பாத திருநாவுக்கரசர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் கொடுத்த இரசாயனம் தடவிய பணத்தை நில அளவையர் சிவாவிடம் கொடுக்கும் போது அதனை மறைந்து இருந்து பார்த்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசாங்க அதிகாரிகளே இதுபோன்ற லஞ்சம் வாங்கும் செயலில் ஈடுபடுவதால் மக்கள் செய்வது அறியாது திகைத்து வருகின்றனர். இதுபோன்ற குற்றவாளிகளுக்கு சரியான தண்டணை கொடுத்தால் மட்டுமே, மற்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்க தயங்குவார்கள் என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow