கஞ்சா புகலிடமா தமிழ்நாடு.. கண்டு கொள்ளுமா அரசாங்கம்.. அச்சத்தில் மக்கள்
தமிழ்நாட்டில் கஞ்சா போதையில் சிக்கிய இளைஞர்கள் பொதுமக்களையும், அரசு பணியாளர்களையும் தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கஞ்சாவின் புகலிடமாக தமிழ்நாடு மாறி வருகிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையும், புழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. கஞ்சாவை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரும் கும்பல், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் பல்வேறு குற்றச் செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசின் மெத்தனப் போக்கு காரணமாகவே தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் அதிகரித்து விட்டதாக, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா வியாபாரிகள், காவல்துறையினரைத் தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள், கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மதுரை ஒத்தக்கடையில் கஞ்சா போதையில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரைத் தாக்கிய நபர் என கடந்த மூன்று நாட்களில், அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரை பகுதியில் நேற்றைய முன் தினம் இரவு பந்தலூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து கொன்று வந்து கொண்டு இருந்தது.
அந்த பேருந்தில் ஓட்டுநர் ரமேஷும், நடத்துனர் செந்தில் குமாரும் இருந்தனர். அந்த அரசுப்பேருந்து பால்லகரை அருகே வந்த போது சாலையின் நடுவே இளைஞர்கள் பைக்கில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஓட்டுநர் ரமேஷ் ஹாரன் அடித்த நிலையில் இளைஞர்கள் நகராததால் அரசுப்பேருந்து அவர்கள் மீது உரசி சென்றதாக கூறப்படுகிறது.
ஆத்திரம் அடைந்த அந்த இளைஞரக்ள், பேருந்துக்குள் சென்று தகாத வார்த்தைகளால் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை திட்டியதுடன், ஓட்டுநர் ரமேஷை பேருந்துக்குள் இருந்து வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க முயன்ற நடத்துனர் செந்தில் குமாரை கடுமையாக தாக்கினர். இதனை தடுக்க முயன்றவர்களையும் ஆபாச வார்த்தைகளால் அந்த இளைஞர்கள் திட்டி உள்ளனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மற்றும் நடத்துனர் செந்தில் உட்பட 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வழியே சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இரண்டு பேர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த போது அவர்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சி செய்து உள்ளனர். இந்த தாக்குதல் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உதயகுமார், கார்த்திகேயன், மாரிமுத்து உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கஞ்சா பழக்கம் அதிகரித்து அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருவதற்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாகச் செயல்பட்டதைக் கண்டுகொள்ளாமல், மூன்று ஆண்டுகளாகக் கோட்டை விட்டது போல, கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது அண்ணாமலை கேட்டுள்ளார்.
தமிழக காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு இருந்த போது, பல கட்டங்களாக ஆபரேசன் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. கடந்த ஓராண்டு காலமாக தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா?என்று காவல்துறையினருக்கு தெரிந்தும் அதை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருப்பது ஏன் கஞ்சா நடமாட்டத்தை முழுவதுமாக ஏன் தடுக்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
What's Your Reaction?