டிடிஎஃப் வாசன் மீண்டும் கைது... செல்போன் பேசியபடி காரை ஓட்டியதால் வந்த சிக்கல்...மதுரை போலீசார் அதிரடி!

ரசிகர்களின் அளப்பரிய அன்பை பெற்ற டிடிஎஃப் வாசன் பைக்கில் அதிவேகமாக செல்வதாகவும், விதிகளை மீறி சாகசம் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இவரை பார்த்து பைக்கில் அதிவேகமாக செல்லும் இளைஞர்கள் விபத்துகளில் சிக்குகின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

May 30, 2024 - 10:22
டிடிஎஃப் வாசன் மீண்டும் கைது... செல்போன் பேசியபடி காரை ஓட்டியதால் வந்த சிக்கல்...மதுரை போலீசார் அதிரடி!
டிடிஎஃப் வாசன்

மதுரை: செல்போன் பயன்படுத்தியபடி காரை ஓட்டிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். பைக் பிரியரான இவர் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்து தனது யூடியூபில் வீடியோ வெளியிட்டு வந்தார். இதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். 

டிடிஎஃப் வாசன் செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்கள் திரண்டு அவருக்கு ஆதரவளித்தனர். ரசிகர்களின் அளப்பரிய அன்பை பெற்ற டிடிஎஃப் வாசன் பைக்கில் அதிவேகமாக செல்வதாகவும், விதிகளை மீறி சாகசம் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இவரை பார்த்து பைக்கில் அதிவேகமாக செல்லும் இளைஞர்கள் விபத்துகளில் சிக்குகின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி சென்னையில் மகாராஷ்டிரா சென்று கொண்டிருந்த டிடிஎஃப் வாசன், காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கினார்.  அதாவது பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர் பைக்கில் முன்சக்கரத்தை தூக்கி வீலிங் செய்ய முயன்று விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இதில் படுகாயம் அடைந்த அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கிடையே போக்குவரத்து விதிகளை மீறி விபத்தை ஏற்படுத்தியதாக அவரை போலீசார் கைது செய்தனர். அவரது ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன், 45 நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார்.

அதன்பின்பு அவரால் பைக் ஓட்ட முடியாததால் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில், செல்போன் பயன்படுத்தியபடி காரை ஓட்டியதாக டிடிஎஃப் வாசனை மதுரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதாவது சில நாட்களுக்கு முன்பு காரில் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற டிடிஎஃப் வாசன் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் மணிபாரதி அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளை மீறுதல் உள்பட 6 பிரிவுகளில் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு டிடிஎஃப் வாசனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow