அப்பனுக்கு ஆப்பு வைத்த மகன் : அன்புமணி மீது ராமதாசு பாய்ச்சல்

பாமக என்னும் ஆலமரத்தின் கிளையை அன்புமணி வெட்ட பார்க்கிறார், அப்பனுக்கு ஆப்பு வைத்த மகன் என அக்கட்சியின் தலைவர் ராமதாசு குற்றச்சாட்டியுள்ளார். 

அப்பனுக்கு ஆப்பு வைத்த மகன் : அன்புமணி மீது  ராமதாசு பாய்ச்சல்
Anbumani is trying to cut a branch of the banyan tree called PMK

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பின்னர் நிருபர்களுக்குஅவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “அன்புமணி பாமகவின் தலைவர் அல்ல, அவருக்கு சின்னமும் ஒதுக்கப்படவில்லை என்று நாங்கள் தொடுத்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் உறுதிப்படுத்தி விட்டது. 

பல மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி, கட்சியின் சின்னத்தை பெயரை பயன்படுத்தக் கூடாது. என் பெயரையும் அவரும், அவர் தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது. இதை சொல்லுகிறவன் இந்த கட்சியை உருவாக்கிய இந்த ராமதாசு.

ஆனால், அன்புமணியும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து அதிகளவில் ஆயிரக்கணக்கான பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை அன்புமணி தொடர்ந்து செய்து வருகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். 

அவருக்கு பல்வேறு பதவிகளை கொடுத்து அழகு பார்த்தேன். தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சியதைப்போல் பாமக என்னும் ஆலமரத்தின் கிளையை வெட்ட ஆரம்பித்திருக்கிறார். இதனுடைய பலன் கீழே விழுவதை தவிர எதுவும் இல்லை .

தமிழகம் முழுவதும் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று ஆலமரம் போல வளர்ந்த கட்சிதான் பாமக. பா.ம.க.வை நான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி ஆரம்பித்தேன். 46 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தேன்.  எனக்கு கூட்டணி குறித்து பேச இந்த நிர்வாகக் குழு முழு உரிமையும் வழங்கியுள்ளது. நிச்சயம் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன்.அவர், அன்புமணி ராமதாஸ் அல்ல; அன்புமணி மட்டுமே.

அவரை பாமகவில் இருந்து நீக்கிவிட்டேன், இருப்பினும் அவர், வேட்புமனுக்களை வாங்கி வருகிறார். டெல்லி தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி அன்புமணி செயல்பட்டு வருகிறார். தவறான புள்ளி விவரங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி இருக்கிறார்கள். ” இவ்வாறு அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow