சர்ச்சை மன்னன் பென் டக்கட்.. இங்கிலாந்தின் அதிரடி மன்னனான கதை!

Feb 17, 2024 - 12:54
Feb 17, 2024 - 13:03
சர்ச்சை மன்னன் பென் டக்கட்.. இங்கிலாந்தின் அதிரடி மன்னனான கதை!

ஒழுக்கம் சரியில்லாதவர் என்று அணித் தலைமையால் ஒதுக்கப்பட்ட பென் டக்கட், ராஜ்கோட் டெஸ்டில் இங்கிலாந்து அணியின் ஹீரோவாக மாறியிருக்கிறார்.

 அஸ்வினின் 500 விக்கெட்டுகள் கொண்டாட்டத்தையே மறக்கடிக்கும் படி, இந்திய ரசிகர்களின் மனதைப் புண்படுத்தியிருக்கிறார் டக்கட். குடித்துவிட்டு கார் ஓட்டியது, உடற்தகுதியில் கவனம் செலுத்தாததால் கேப்டன்சியை இழந்தது, குடி போதையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது மதுவை ஊற்றியது என்று சர்ச்சைகளின் நாயகனாகவே பென் டக்கட் பார்க்கப்பட்டார்.காணாமல் போய்விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டக்கட், பேஸ்பால் யுகத்தில் அணியின் நம்பிக்கை நாயகனாக மாறியது எப்படி.

அதிரடி இடக்கை பேட்டரான பென் டக்கட், 2016-ல் நார்த்தாம்டன்ஷையர் அணிக்காக பிரமாதமாக விளையாடியதால் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். 2016 இந்திய சுற்றுப்பயணத்தின் போது அஸ்வினின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இரண்டு டெஸ்ட்டுகள விளையாடிய நிலையில், அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு, உள்ளூர் போட்டிகளில் மீண்டும் திறமையை நிரூபித்த டக்கட், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார்.

பெர்த்தில் ஒரு மதுக்கூடத்தில் இங்கிலாந்து வீரர்கள் மது அருந்தினர். அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் துணை கேப்டன் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது மதுவை கோபத்தில் வீசியெறிந்தார். இதையடுத்து, உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்ட டக்கட், இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார். சர்ச்சைகள் ஒன்றும் டக்கட்டிற்கு புதிதல்ல. 2013-ல் உடற்தகுதியில் கவனம் செலுத்தாததால் அண்டர் 19 அணியின் கேப்டன் பதவியை இழந்தார். 2015-ல் குடித்துவிட்டு காரோட்டியதால், நீதிமன்றத்தில் ஆஜராகி அபராதம் கட்டினார். 

2017-ல் அணியில் இருந்து நீக்கப்பட்ட டக்கட், உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். உள்ளூரில் தொடர்ந்து ரன்கள் குவித்தாலும் சர்வதேச கிரிக்கெட் அணியின் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த நிலையில், ரூட் கேப்டன் பதவியை விட்டு விலகியவுடன் இங்கிலாந்தின் அணுகுமுறை மாறியது. பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணி அதிரடியான ஆட்டத்தைப் பிரதானப்படுத்தும் பேஸ்பால் உத்தியை கையில் எடுத்தது. நீண்ட கால காத்திருப்பில் வைக்கப்பட்ட பென் டக்கட் மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

சுதந்திரமாக விளையாட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி டக்கட் அதிரடியாக ரன் குவித்தார். தற்போதைய இந்திய சுற்றுப்பயணத்தில் முதலிரு டெஸ்ட்டுகளில் அவர் பெரியளவுக்கு ரன் குவிக்கவில்லை. ஆனால், இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் கொடுத்தது. தன் மீதான அணியின் நம்பிக்கையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த் டக்கட், ராஜ்கோட் டெஸ்டில் சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஸ்வீப், ரிவரஸ் ஸ்வீப் என்று இந்திய சுழலர்களை பதம்பார்த்த அவர், 88 பந்துகளில் ஒரு அட்டகாசமான ஆன் டிரைவுடன் சதத்தை எட்டினார். இது, சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு மூன்றாவது சதம். இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் போது. ஆட்டமிழக்காமல்133 ரன்களை குவித்தார்.

மூன்றாவது நாளும் ஆதிக்கத்தை செலுத்திய அவர், 151 பந்துகளில் 153 ரன்கள் குவித்து குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 23 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடக்கம். 2016-ல் அஸ்வின் பந்தில் தடுமாறிய டக்கட் இன்று, அஸ்வினின் மதிப்பிற்குரிய கிரிக்கெட்டராக மாறியுள்ளார். “டக்கட், ஒரு திறமையான பேட்டர்” என்கிறார் அஸ்வின்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow