ரஷ்ய தலைநகரை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்... 60 பேர் பலி- சம்பவத்திற்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் !

தாக்குதல் செய்தி வந்தவுடன் இது உக்ரைனின் எதிர் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது !

Mar 23, 2024 - 08:15
ரஷ்ய தலைநகரை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்... 60 பேர் பலி- சம்பவத்திற்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் !

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசைநிகழ்ச்சியின் போது, அரங்கிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 60 பேர் உயிரிழந்த சம்பவம் உலகநாடுகளை அதிரவைத்துள்ளது. 

மாஸ்கோவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள க்ரோகஸ் அரங்கில் பிக்னிக் என்ற இசைக்குழு நடத்திய நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரத விதமாக அரங்கிற்குள் புகுந்த மர்மநபர்கள் கண்மூடித்தனமாக மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அத்துடன் கையில் இருந்த வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் அரங்கம் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கு 10க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அத்துடன் போலீசார் மற்றும் ராணுவம் அதிரடியாக அரங்கிற்குள் நுழைந்து தாக்குதலை தடுத்து நிறுத்தி மக்களை மீட்டனர். இந்த சம்பவத்தில் 2க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. 

இந்த சம்பவத்தை மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் என விவரித்து ரஷ்யா கடும் கண்டனங்களை பதிவிட்டுள்ளது.  அதுமட்டுமின்றி அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற உலகநாடுகளும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தாக்குதலுக்கு எதிராக கண்டனங்களை பதிவிட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் செய்தி வந்தவுடன் இது உக்ரைனின் எதிர் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில்,  இந்த தாக்குதலுக்கு ஈரானில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ்- கொரசன் (khorasan)பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அத்துடன் இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என உக்ரைன் நாட்டு அதிபர் மாளிகை ஆலோசகர் மைகைலோ போடோல்யாக் தெரிவித்துள்ளார். 

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு ரஷ்யாவில் இஸ்லாமிய ஸ்டேட் எனப்படும் ISIS பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படாலம் என எச்சரித்து இருந்தது. இந்நிலையில், சரியாக ரஷ்ய அதிபர் தேர்தல் நடந்துமுடிந்த சில நாட்களில் நாட்டையே உலுக்கும் அளவிலான தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow