சலூன் கடையுடன் சைடு பிஸினஸ்... குலுக்கல் சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி.. தலைமறைவான தம்பதி..
சிவகங்கை அருகே குலுக்கல் சீட்டு நடத்தி 2 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டு தலைமறைவான தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் சலூன் கடை நடத்தி வந்தவர் கலைராஜன். இவரது மனைவி மைதிலி. இவர்கள் இருவரும் சலூனில் முடி திருத்தம் செய்ய வரும் அந்த பகுதியினரிடம் குலுக்கல் சீட்டு நடத்துவதாகவும், அதன் மூலம் குறைந்த பணத்தில் இருசக்கர வாகனங்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அவர்களது ஆசை வார்த்தையை நம்பிய அதே ஊரைச் சேர்ந்த பிரபு என்பவரும் அவருடன் பலரும் பணம் கட்டியுள்ளனர். குறிப்பிட்ட நாள் கடந்த உடன் குலுக்கல் குறித்து பணம் கட்டியவர்கள் கேட்ட போது, தேர்தலை காரணம் காட்டி கலை ராஜன் நாட்களை கடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென கடந்த மாதம் 24 ஆம் தேதி கலைராஜன், அவரது மனைவி மைதிலி ஆகியோர் வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.
இதனால் பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பணத்தை இழந்தவர்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பணத்தை மீட்டு தரக்கோரி புகார் மனு அளித்தனர். குலுக்கல் சீட்டு நடத்தி பலரிடம் ரூ.2 கோடிக்கும் மேல் பணம் வசூலித்து மோசடி செய்து தலைமறைவான சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?