வேட்பு மனு.. கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ்... தேனியில் டிடிவி தினகரன் நிம்மதி பெருமூச்சு...

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் வேட்புமனு மதியம் வரை நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் 3 மணிக்கு மேல் ஏற்கப்பட்டது.

Mar 28, 2024 - 15:40
Mar 28, 2024 - 16:09
வேட்பு மனு.. கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ்... தேனியில் டிடிவி தினகரன் நிம்மதி பெருமூச்சு...

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் வேட்புமனு மதியம் வரை நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் 3 மணிக்கு மேல் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

2024 மக்களவைத் தேர்தல் வேட்புமனு செய்யும் நேரம் நேற்று புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியுடன் நிறைவுபெற்றது. இதில் தேனி மக்களவை தொகுதியில் பிரதான கட்சிகள், சுயேட்சைகள் என மொத்தம் 43  வேட்புமனுகள் தாக்கல் செய்யப்பட்டன. 

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று புதன்கிழமை டிடிவி தினகரன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நூறுக்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் டிடிவி தினகரனுடன் வந்த ஏராளமானோர் உள்ளே நுழைய முயன்றதால், போலீசார் அவர்களைத் தடுத்தனர். அதனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு டிடிவி ஆதரவாளர்களும் போலீசாரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
பின்னர் அவர்களை அமைதிப்படுத்தி டிடிவி தினகரன் வந்த காரில் இருந்த கட்சிக்கொடியை மட்டும் அகற்றி, அவரது காரை மட்டும் உள்ளே நுழைய போலீசார் அனுமதி கொடுத்தார்கள்.

இன்று வியாழக்கிழமை தேனி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா முன்னிலையில்  வேட்புமனுகள் பரிசீலனை  செய்யப்பட்டன. 43 வேட்புமனுக்களில் 8 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

பரிசீலனையில் டிடிவி தினகரனின் பிரமாண பத்திரத்தில் இந்தியக் குடியுரிமை, ஃபெரா (FERA) வழக்கு அபராதம் மற்றும் விவசாய நிலங்களின் விபரங்கள் முழுமையாக இடம்பெறவில்லை என திமுக வேட்பாளரின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு எழுப்பியதால் டிடிவி தினகரன் வேட்புமனுவை மதியம் வரை நிறுத்திவைக்கப்பட்டது. 

பாஜக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். கடைசி நிமிடம் வரைக்கும் அவரது வேட்பு மனுவை ஏற்றுக்கொள்வதில் சஸ்பென்ஸ் நீடித்தது. வேட்புமனு மீதான பரிசீலனை மீண்டும் மதியம் 3 மணிக்கு தொடங்கிய பின்னர் டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் டிடிவி தினகரனும் அவரது ஆதரவாளர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow