நான் எப்ப பிரச்சாரம் செய்றது... தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய மன்சூர் அலிகான்... பாய்ந்த வழக்கு
பரப்புரைக்கு அனுமதி கேட்டால், தேர்தல் முடிந்துதான் அனுமதி தருவார்கள் என்று தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட மன்சூர் அலிகான் மீது மீண்டும் ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மக்களவைத்தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் பாலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இன்று மன்சூர் அலிகான் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பரப்புரையைத் துவங்கினார். அப்பொழுது தேர்தல் பறக்கும் படை அலுவலர் அகமது ஜலாலுதீன் தலைமையிலான அதிகாரிகள் மன்சூர் அலிகானிடம், தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியில்லாமல் பரப்புரை செய்யக்கூடாது என்று கூறினார்கள்.
அதற்கு மன்சூர் அலிகான், நான் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தால், தேர்தல் முடிந்த பின்னர் தான் எனக்கு அனுமதி வரும் என்று கூறினார். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டும் தொணியில் பேசினார் மன்சூர் அலிகான்.
அதிகாரிகள் தடுத்தும் கேட்காமல், பரப்புரை வாகனத்தில், ஆம்பூர் புறவழிச்சாலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். இந்நிலையில் அனுமதியின்றி பரப்புரையில் ஈடுப்பட்டதாக மன்சூர் அலிகான் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி அகமத் ஜலாலுதீன் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மன்சூர் அலிகான் மீது 143,188,190, 191 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறார். இப்போது தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்து ஊடக வெளிச்சத்தில் சிக்கியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி மற்றும் 29 ஆம் தேதிகளில் ஆம்பூரில் உரிய அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டதாக ஆம்பூர் நகர காவல்துறையினர் ஏற்கனவே 2 முறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் வழக்கு பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?