திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க பேரவை கூட்டத்தில் காலணி வீச்சு -3 பேர் கைது
அறிக்கை படிக்கும்போது போனஸ் தொகை தொடர்பாக கேள்விகள் எழுப்பி சங்க மேலாண் இயக்குனர் மாதேஸ்வரனை நோக்கி சங்க உறுப்பினர் காலணியை எடுத்து வீசினார்.
ஆண்டிற்கு ரூ.60 கோடி விற்பனை நடைபெறும் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க பேரவை கூட்டத்தில் நிர்வாக இயக்குனரை நோக்கி காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனத்தில் இந்தியாவிலேயே கடந்த 68 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. ஆண்டிற்கு ரூ.60 கோடி விற்பனை இலக்கு அடைந்து வரும் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க 68வது பேரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. ஆண்டறிக்கை புத்தகம் வெளியிட்டதில் பிரதமர் படம் இடம்பெறவில்லை என பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் இன்று கூட்டம் நிர்வாக இயக்குனர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
முன்னெச்சரிக்கையாக திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தலமான போலீசார் சங்கத்தின் வெளியே குவிக்கப்பட்டிருந்தனர். கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆண்டு அறிக்கை படிக்கும்போது போனஸ் தொகை தொடர்பாக கேள்விகள் எழுப்பி சங்க மேலாண் இயக்குனர் மாதேஸ்வரனை நோக்கி சங்க உறுப்பினர் காலணியை எடுத்து வீசினார். காலணி சங்க மேலாளர் ஜெயமாலா மீது பட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சங்கத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உடனடியாக சங்க உறுப்பினர்கள் காலணி வீசிய நபர் பாஜக பிரமுகர் நாகேந்திரன் உள்ளிட்ட மூன்று பேரை திருவிடைமருதூர் போலீசில் ஒப்படைத்தனர். பரபரப்பான சூழலுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து கூட்டம் நடந்தது.
What's Your Reaction?