இன்று வேளாண் பட்ஜெட்.. விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்குமா அரசு? தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே..!

முக்கிய கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ள நிலையில், எதிர்பார்ப்புகளை பட்ஜெட் நிறைவேற்றுமா என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Feb 20, 2024 - 07:17
Feb 20, 2024 - 07:23
இன்று வேளாண் பட்ஜெட்.. விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்குமா அரசு? தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே..!

சட்டப்பேரவையில் இன்று திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் நிலையில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் அதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024 ஆண்டின் முதல் கூட்டம், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதில் அரசு தயாரித்த உரையின் முதல் பத்தியை மட்டும் வாசித்த ஆளுநர், 3 நிமிடங்களில் உரையை முடித்துவிட்டுக் கிளம்பினார். அவரது செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே நேற்று (பிப்.19-ம் தேதி) சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். ‘மாபெரும் 7 தமிழ்கனவு’ என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம் என்பது உள்ளிட்ட 7 சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் தமது முதல் நிதிநிலை அறிக்கை உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தார். 

இந்த நிலையில் இன்று வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொடர்ந்து 4-வது ஆண்டாக தமது வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தபடி வேளாண் துறைக்கு கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டு வருகிறது. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிக பிரிவுகள், வேளாண் பொறியியல் உள்ளிட்டவை மட்டுமின்றி கூட்டுறவு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் போன்ற விவசாயம் தொடர்புடைய துறைகளிலும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற உள்ளன. 

மேலும், மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் விவசாயிகளைக் கவரும் வகையில் வேளாண் பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த விவசாயிகளுக்கு உதவித்தொகை, மண்வள மேம்பாட்டில் தனி கவனம், வேளாண் விளைபொருட்கள் அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ள நிலையில், எதிர்பார்ப்புகளை பட்ஜெட் நிறைவேற்றுமா என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதில், சென்றாண்டில் வேளாண் துறைக்கு ரூ.38,904 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow