வாகன சோதனையில் சிக்கிய ரூ.25.90 லட்சம்... விசாரணையில் தெரியவந்த உண்மை....

Apr 6, 2024 - 01:17
வாகன சோதனையில் சிக்கிய ரூ.25.90 லட்சம்... விசாரணையில் தெரியவந்த உண்மை....

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் எதுவும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 25.90 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி மாநிலம் முழுவதும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி அருகேயுள்ள பள்ளிப்பட்டு ஒன்றியம் நெடுங்கல் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, வாகனத்தில் வந்தவர், தனது பையில், 25 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. 

மேலும், பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை திருத்தணி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., தீபாவிடம் ஒப்படைத்தனர். 

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் பணம் கொண்டு சென்றவர், திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பதும், அவர் இந்தியா ஓன் ஏ.டி.எம்., மையங்களில், பணம் நிரப்பும் பணி செய்து வருவதும் தெரியவந்தது.

நேற்று அரக்கோணம் எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து, 25.90 லட்சம் ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை மற்றும் நொச்சிலி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்கு கொண்டு செல்வதும் கண்டறியப்பட்டது. 

ஆவணங்களின்றி எடுத்துச் சென்றதால் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், உரிய ஆவணங்களை கருவூலத்தில் சமர்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் அவரிடம் கூறி அனுப்பிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow