கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான பறவை காய்ச்சல்... அறிகுறிகள் என்னென்ன..?
                                கொரோனாவை விட ஆபத்தான பறவைக் காய்ச்சல், மிக வேகமாகப் பரவினால், உலக அளவில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
H5N1 என்று சொல்லப்படும் பறவைக் காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. இந்த நோய், கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தானது என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த நோய் பரவினால் அதிக மரணங்கள் நிகழும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கொரோனா போல இந்த நோயும் உலகையே அச்சுறுத்தும் அளவிற்கு மோசமானது. இந்த நோயை உண்டாக்கும் வைரஸ் மாடு, பூனை, மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகள் மூலம் பரவ வாய்ப்புள்ளது. பெரும்பாலும் காட்டில் வாழும் பறவைகள் மற்றும் கோழிப்பண்ணைகளில் இருக்கும் கோழிகளுக்கு இந்த பறவைக் காய்ச்சல் அதிகமாக பரவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், மனிதர்களுக்கும் இந்த பறவைக் காய்ச்சல் மிக எளிதாக பரவக்கூடியது எனவும் எச்சரிக்கின்றனர்.
2003 ஆம் ஆண்டு வரை இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட 100 பேரில் 52 பேர் இறந்து போனதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது. மேலும், கொரோனா தொற்றின் ஆரம்ப காலங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதத்தினரே மரணித்தார்கள். ஆனால், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
காய்ச்சல், சளி, தொண்டை வலி, தசைகளில் வலி, தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, வாந்தி, மூக்கில் ரத்தம் வடிவது, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளே பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். வேகமாகப் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            