மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிச.15 முதல் ரூ.1000 வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
விடுபட்ட மகளிருக்கு உரிமை தொகை ரூ. 1000 டிச 15 முதல் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் 605 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும் என்றும் உறுதியளித்தார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. ஆட்சியில் தான் பஹல்காம் தாக்குதல், செங்கோட்டை தாக்குதல் நடந்துள்ளது. பயங்கரவாத தாக்குதலை தடுக்காத பா.ஜ.க. ஆட்சியை கவர்னர் புகழ்ந்து பேசுகிறார். கவர்னர் ஆர்.என்.ரவி திமிருடன் பேசுகிறார், அவரது திமிரை அடக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதால் கவர்னருக்கு ஏன் வயிறு எரிகிறது. தமிழ் மொழிப்பற்று குறித்து எங்களுக்கு கவர்னர் பாடம் எடுக்க வேண்டாம். தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதாக கவர்னர் அவதூறு பரப்புகிறார். மக்களுக்கும், திமுக அரசுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை கெடுக்க சதி செய்கிறார்கள். கவர்னர் ஆர்.என்.ரவி இப்படியே தொடர்ந்து பேசினால் தான் எங்களுக்கு வேலை ஈஸி. இவ்வாறு அவர் பேசினார்.
What's Your Reaction?

