ரூ.150 இருந்தா போதும்.. கொடைக்கானலை முழுசா ரவுண்ட் அடிக்கலாம்.!
ஒரு முறை எடுக்கப்படும் டிக்கெட் மூலம் கொடைக்கானலில் உள்ள 12 எழில்மிகு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள்
கோடை சீசன் துவங்கியதை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகளை குறைந்த கட்டணத்தில் அரசு பேருந்தில் அழைத்து சென்று கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை காண்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கியுள்ளது. இதேவேளையில், பல்வேறு மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவுவதால், கொடைக்கானலில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி, பெரியவர்கள் ரூ.150-க்கும், சிறியவர்கள் ரூ.75-க்கும் டிக்கெட் எடுத்து அந்த பேருந்துகளில் பயணிக்கலாம். இந்த பேருந்துகளில் ஒரு முறை எடுக்கப்படும் டிக்கெட் மூலம் கொடைக்கானலில் உள்ள 12 எழில்மிகு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள், திண்டுக்கல், பழனி, மதுரை, வத்தலக்குண்டு, திருச்சி ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து கொடைக்கானலுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீசன் நிறைவடையும் வரை நாள் தோறும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்தின் சார்பாக சுற்றுலா சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கொடைக்கானல் போக்குவரத்துக் கழகத்தின் கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?