மழையில் நனைந்தபடி மக்கள் நலப்பணியாளர்கள் பேரணி
மக்கள் நலப்பணியாளர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருவாரூரில் கை குழந்தைகளுடன் கொட்டும் மழையில் பிச்சை எடுத்தவாறு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுக தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.அதன்படி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாரை ஆண்டுகளுக்கு மேலாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதாக கூறி போராட்ட இறங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 13,500க்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரை ஏமாற்றி அவர்களது வாக்குகளைபெற 2021 சட்டமன்ற தேர்தலின்போது பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணிபாதுகாப்பு என வாக்குறுதிகளை அளித்ததை நம்பி வாக்களித்து ஏமாற்றப்பட்டுவிட்டோம் எனவும் தற்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு மக்கள் நலப்பணியாளர்களை முதல்வர் ஸ்டாலின் ஆளாக்கிவிட்டார் என்றும் மக்கள் நல் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனை கண்டித்து மறைந்த முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் தமிழகம் முழுவதும் இருந்து திரண்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திருவாரூரில் விஜயபுரம் கடைவீதியில் இடுப்பில் கோவனத்துடன், கையில் தட்டு ஏந்தி கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து நீண்ட நேரம் மழையில் நிற்க வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மக்கள் நலப்பணியாளர்கள் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கும், மக்கள் நலப்பணியாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் மக்கள் நலப்பணியாளர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
What's Your Reaction?