வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்தும்படி கோர்ட்டில் முறையீடு!
ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியை மக்களின் நேரடி வங்கி கணக்கில் செலுத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் இந்த தொகையை நேரடியாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழக அரசு நிவாரண தொகை வழங்குவது பாராட்டக்குரியது எனவும், அந்த தொகையை ரேஷன் கடைகள் மூலம் அல்லாமல் நேரடியாக கொடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளதோடு
நியாயமாக பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு, நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வரும் நிலையில் இந்த பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்துவதில் அரசிற்கு எந்த வித சிரமும் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
What's Your Reaction?