எதையாவது வச்சுட்டு போய்டீங்கனா.. போலீசை வீட்டிற்குள் விட மறுத்த பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி.. கடும் வாக்குவாதம்

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் வீட்டில் சோதனை செய்ய வந்த போலீசாரிடம் அவரது மனைவி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

May 14, 2024 - 16:10
எதையாவது வச்சுட்டு போய்டீங்கனா.. போலீசை வீட்டிற்குள் விட மறுத்த பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி.. கடும் வாக்குவாதம்

பெண் காவலர்களை இழிவாக பேசியதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து அதனை ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் வெளிட்டதால் அதன் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். 

இதையடுத்து திருச்சி கொண்டு வரப்பட்ட அவருக்கு வருகிற 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று திருச்சி மத்திய சிறையில் பெலிக்ஸ் ஜெரால்ட் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் 2-வது தெருவில் உள்ள பெலீக்ஸ் ஜெரால்டு வீட்டிற்கு திருச்சியில் இருந்து வந்த சுமார் 10 போலீசார் சோதனை நடத்த வருகை புரிந்தனர். 

அப்போது சோதனைக்காக அடுக்குமாடி குடியிருப்பின் 4 மாடிக்கு செல்ல லிப்ட்டில் திருச்சி போலீசார் ஏறியபோது திடீரென லிப்ட் பழுதாகி போலீசார் உள்ளே சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த பத்திரிகையாளர்கள் போலீசாரை பத்திரமாக மீட்டனர். 

இதை தொடர்ந்து பெலிக்ஸ் வீட்டிற்கு போலீசார் சென்றபோது அவரது மனைவி, போலீசாரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "உங்களை விட வேண்டுமென்றால் உங்களின் ஆதாரங்களை தர வேண்டும் எனவும், 
பெண் காவலர்கள் எத்தனை பேர் வந்துள்ளார்கள் அவர்களது உடைமைகளை சோதனை செய்ய வேண்டும் என்றும் நீங்கள்  எதையாவது வீட்டில் வைத்துவிட்டு சென்றுவிட்டால், என்ன செய்வது?. சோதனை செய்து தான் உள்ளே அனுமதிப்பேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவை காண்பித்த பிறகே சோதனை செய்ய வீட்டிற்குள் பெலிக்ஸின் மனைவி அனுமதித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow