நீட் ரகசியம் என்னாச்சு? விளையாட்டு பிள்ளை.. உதயநிதியை போட்டு தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
அதிமுக அடையாளம் காட்டியவர்களை அழைத்துச் சென்று அமைச்சரவையில் இடம் கொடுப்பதற்கு பதிலாக திமுகவை கலைத்துவிட்டுப் போகலாம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்தனமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.பி.உதயகுமார், "நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என கூறிய உதயநிதி, லண்டனில் சுற்றுலா முகாம் அமைத்துள்ளார். இளைஞர் நலன் மேம்பாட்டிற்காக பாடுபடுவார் என பார்த்தால் அவரது மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, ஒரு விளையாட்டுப் பிள்ளையாகத்தான் இருக்கிறார். நீட் தேர்வு ரகசியத்தை மறந்துவிட்டு குடும்பத்துடன் லண்டன் சென்றுவிட்டார் என மக்கள் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர்" என விமர்சனம் செய்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கணக்கீடு செய்வோம் என வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இன்று பழுதடைந்துள்ள மின் மாற்றிகளை கூட சீர் செய்யாமல் விட்டுவிட்டனர். மக்கள் பயன்படுகிற எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் திமுக கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றிலே பறக்க விட்டுவிட்டனர் எனவும் ஆர்.பி உதயகுமார் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதிமுகவில் பிளவு வரும் என திமுக அமைச்சர் ரகுபதி சொல்கிறார். நான் அவரிடத்தில் கேட்க விரும்புகிறேன். உங்களைப் போன்றவர்களை அமைச்சரவையில் முதலிடத்தில் திமுக உட்கார வைத்துள்ளது. அதிமுகவில் ஜெயலலிதா அமைச்சராக்கி அழகு பார்த்தவர்களை இன்று திமுகவில் அமைச்சர்களாக ஆக்கியுள்ளனர். அதிமுக அடையாளம் காட்டியவர்களை அழைத்துச் சென்று அமைச்சரவையில் இடம் கொடுப்பதற்கு எதற்கு கட்சி நடத்த வேண்டும். அதற்கு பதிலாக திமுகவை கலைத்துவிட்டுப் போகலாம். திமுக அமைச்சரவையில் முதல் வரிசையில் உட்கார்ந்து இருப்பவர்கள் அதிமுகவில் தாய்ப்பால் குடித்தவர்கள்" எனத் தெரிவித்தார்.
அதிமுகவில் உள்ள சர்ச்சைக்கு காரணம் வேட்பாளர் தேர்வுதான் என குற்றச்சாட்டு எழுந்திருப்பதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார், "வேட்பாளர்களை ஜனநாயக முறைப்படி எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்துள்ளார். வேட்பாளர்கள் எப்படி தேர்வு செய்கிறார்கள் என்பது தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் தெரியும். அதிமுகவின் விஸ்வரூப வளர்ச்சி அனைவரின் கண்களையும் உறுத்துகிறது. எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.
நெல்லை ஜெயக்குமார் கொலை வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார், "சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறைக்கு உரிமை உள்ளது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்து விட முடியும். அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக தமிழக காவல்துறையாக இருந்தது. ஆனால் இப்போதுள்ள ஆட்சியாளர்களால் காவல்துறை செயலிழந்து இருக்கிறது" என விமர்சனம் செய்தார்.
What's Your Reaction?