இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! விரைவில் அமலுக்கு வருகிறது...

Mar 27, 2024 - 10:55
இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! விரைவில் அமலுக்கு வருகிறது...

சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஒரு மாதத்தில் 50 ஒருவழிப் பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.45 முதல் ரூ.200 வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒரு மாதத்தில் 50 ஒரு வழிப் பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரையும், உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow