"இந்தியாவில் முதன்முறையாக மாநிலக்கட்சி ஆட்சியமைத்த நாள்" முதலமைச்சர் பெருமிதம்...
இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள் இன்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு மாநிலக்கட்சி ஆட்சி அமைத்த நாள் மார்ச் 6. 1967. திமுகவின் சார்பில் 1967-ம் ஆண்டு அண்ணாதுரை முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். சுமார் 23 மாதங்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அவர், 1969-ல் மறைந்த பிறகு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் திமுக செயல்படத் தொடங்கியது. தொடர்ந்து திமுக சார்பில் 5 முறை முதலமைச்சராக பதவியேற்ற அவர், கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் திமுகவின் முகமாக இருந்தார். அவருக்குப் பின் திமுக சார்பில் 3 வது தலைமுறை முதலமைச்சராக தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவிவகித்து வருகிறார்.
தொடர்ந்து திமுக முதன்முதலில் ஆட்சியமைத்த நாளான இன்று, இதனை நினைவு கூறும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக்கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள் என குறிப்பிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அன்று தமிழ்நாட்டைக் காத்தோம், இன்று மொத்த INDIA-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் வரலாறு படைப்போம் எனவும் நாட்டைக் காப்போம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?