திருவாரூர்: சம்பா பயிரை புகையான் நோய் தாக்குதலிருந்து காப்பாற்ற விவசாயிகள் மனு
சம்பா சாகுபடி பயிர்கள் வைகோலுக்கு கூட தகுதியில்லாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் மன வேதனை
திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நடப்பு சம்பா சாகுபடி புகையான் நோய் தாக்குதலால் பாதிப்புகுள்ளாகி உள்ளதால் நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க விவசாயிகள் மனு அளித்தனர்.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பகுதியான திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான தண்ணீரை பாசன ஆறு, வாய்க்கால்களில் அரசு திறந்துவிடாத காரணத்தால் தண்ணீர் இன்றி சுமார் 60 சதவீதத்திற்கு மேல் குறுவை பயிர்கள் காய்ந்து கருகியதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர்.
இந்நிலையில் சம்பா சாகுபடியாவது கைகொடுக்கும் என்ற நிலையில் அதிலும் மண் விழுந்த கதையாக பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து விடுவிக்காமல் அரசு வஞ்சித்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இத்தகைய சூழலில் வேளாண்துறை அதிகாரிகள் பருவமழையினை நம்பி விவசாயிகளை நேரடி நெல் விதைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல்விதைப்பு மூலமாகவும் மற்றும் நடவு மூலமாக சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் நடப்பு சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் பருவமழையும் கைகொடுக்காத நிலையில் தங்களது வயல் பரப்புக்கு அருகாமையில் பம்புசெட் மூலம் தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் தண்ணீரை விலைக்கு வாங்கி நேரடி நெல் விதைப்பு பணி மேற்கொண்ட விவசாயிகள் சம்பா பயிர்களை காப்பாற்றினர். இதற்கு உதவியாக அவ்வப்போது பெய்த மழையும் சம்பா சாகுபடி பணிக்கு கைகொடுத்தது.
இத்தகைய சூழலில் பயிர் வளர்ந்து நெற்கதிர்கள் வரக்கூடிய தற்போதைய நிலையில் புகையான் நோய் பயிர்களை தாக்கி பயிர் வளர்ச்சியை அடியோடு பாதித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நன்னிலம், பேரளம் முதலான பெரும்பாலான பகுதிகளில் நேரடி நெல்விதைப்பு மேற்கொண்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர்கள் புகையான் நோய் தாக்குதலால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்புக்கு உள்ளாகி அவதியுற்று வருகின்றனர்.
மேலும் புகையான் நோய் தாக்குதலுக்கு உள்ளான சம்பா சாகுபடி நெல் வயல்பரப்பு முழுவதிலும் இனி அதனை நம்பி பலன் இல்லை எனவும், கடன் வாங்கி வயலில் போட்ட முதலை எடுப்பது இயலாத காரியம் எனவும், தற்போதைய சூழ்நிலையில் புகையான் தாக்குதலுக்கு உள்ளான சம்பா சாகுபடி பயிர்கள் வைகோலுக்கு கூட தகுதியில்லாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் குடவாசல் தாலுக்கா, சிதக்கமங்கலம் ஊராட்சி, உக்கடை கிராமத்தை சேர்ந்த விவசாயி பெருமாள்மணி, கணேசன், வீராசாமி ஆகிய விவசாயிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீயை புகையான் தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிருடன் கண்ணீர்மல்க சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தனர். அதில் வேளாண்துறை அறிவுரையின்படி நேரடி நெல்விதைப்பு மூலம் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டதாகவும், கந்தவட்டிக்கு கடன்வாங்கி தண்ணீரை விலைக்கு வாங்கியும். பயிருக்கு தேவையான உரம், பூச்சிமருந்து போன்றவைகளை தெளித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை எனவும், இனி தங்கள் வயலில் உள்ள நெற்பயிர்கள் வைகோலுக்கு கூட தகுதியில்லாத நிலையில் இருப்பதாகவும் எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?