உதகை தினசரி மார்க்கெடில் உள்ள கடைகள் இடிப்புக்கு எதிர்ப்பு-பல கட்ட போராட்டத்திற்கு அழைப்பு
ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை ஆட்சியரிடம் திருப்பி வழங்கும் போராட்டம் நடத்தப் போவதாகவும் வியாபாரிகள் எச்சரிக்கை
உதகை நகராட்சியிலுள்ள தினசரி மார்க்கெட்டை இடிக்கும் விவகாரத்தில் சரியான முறையை கடைபிடிக்காவிட்டால், வருகிற 20-ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் போவதாக மார்க்கெட் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் பழமையானதாக உள்ளதாகவும், போதிய வசதிகளின்றி இருப்பதாகவும் கூறி அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் 3 கட்டங்களாக நடைபெறும் என முதலில் நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது ஒரே கட்டமாக இந்த பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்ததால், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை எதிர்த்து உதகை மார்க்கெட் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மார்க்கெட் வியாபாரிகள் பொதுக்குழுவை கூட்டி, அனைத்து வியாபாரிகளையும் ஒன்று திரட்டி முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை ஆட்சியரிடம் திருப்பி வழங்கும் போராட்டம் நடத்தப் போவதாகவும் வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?