தேர்தல் நன்கொடை வழங்கிய Top 10 நிறுவனங்கள் இதோ... அதிகபட்ச நிதி பெற்ற பாஜக ! திமுக, அதிமுகவுக்கும் பட்டியலில் இடம்..
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தேர்தல் பத்திர தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்ட நிலையில், திமுக - அதிமுகவும் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.
உறுதிமொழிப் பத்திரம் போன்ற தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தக் குடிமகனும், நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து பெற்று, தான் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரத் திட்டத்தை மத்திய அரசு முன்னதாக அறிமுகப்படுத்தியது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தனியார் அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அந்நடைமுறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து 13ம் தேதி யார் யாருக்கு கொடுத்தார் என்பதுடன் தேர்தல் பத்திரத் தகவல்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டும் எனவும், அதனை 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களுடன் முதல் பட்டியலும், அரசியல் கட்சிகளின் பெயர்கள் - பத்திர மதிப்புகளுடன் - அவை பணமாக்கப்பட்ட தேதிகளுடன் 2வது பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக நன்கொடை வழங்கிய டாப் 10 நிறுவனங்களின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
1. Future Gaming and Hotel Services PR - ரூ.1,368 கோடி
2. Megha Engineering & Infrastructures Ltd - ரூ.966 கோடி
3. Qwik Supply Chain Pvt Ltd - ரூ.410 கோடி
4. Vedanta Ltd - ரூ.400 கோடி
5. Haldia Energy Ltd - ரூ.377 கோடி
6. Bharti Group - ரூ.247 கோடி
7. Essel Mining & Industries Ltd - ரூ.224 கோடி
8. Western UP Power Transmission Company Ltd - ரூ.220 கோடி
9. Keventer Foodpark Infra Ltd - ரூ.195 கோடி
10. Madanlal Ltd - ரூ.185 கோடி
தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தகவல்களின்படி, 2019 ஏப்ரல் முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரூ.6,060 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்களின் மூலம் (47%) பாஜகவே பணமாக்கியது தெரியவந்துள்ளது. 2வது இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ரூ.1,609 கோடியுடன் (12.6%) 2வது இடத்தையும், காங்கிரஸ் ரூ.1,421 கோடியுடன் (11.1%) 3வது இடத்தையும் பெற்றுள்ளது. பாரத ராஷ்டிர சமிதி 9.5%, பிஜூ ஜனதா தளம் 6.1%, திமுக 5% நிதியை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ரூ.6.10 கோடி பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?