நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட முடியாது- இந்திய தேர்தல் ஆணையம்
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் அடிப்படையில், வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில் அதன் விவரங்களை வெளியிட முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மீது நாளுக்கு நாள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது எதிர்கட்சிகள். இந்த நிலையில் பீகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியலில் நீக்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள தகவல், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையினை மேலும் கேள்விக்குறியாகியுள்ளது என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளன.
243 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைப்பெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ”Special Intensive Revision (SIR)” என்கிற பெயரில் வீடு வீடாக சென்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஜூன் 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆரம்பம் முதலே ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன் விவரங்களை கேட்டு தான் தற்போது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை வரும் நாட்களில் நடைப்பெற உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான உத்தரவினை தரும் என எதிர்கட்சிகள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
What's Your Reaction?






