விளையாட்டு பிரியர்கள் உஷார்.. DREAM -11 ஆஃப் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியா..? ஆட்சியரிடம் பரபரப்பு புகார்
பிரபல DREAM -11 ஆஃப் மூலம் மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்படுவதாக மதுரை ஆட்சியரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல்.ஐ குறிவைத்து பல்வேறு மொபைல் ஆஃப் மூலமாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பணத்தை பெற்றுக்கொண்டு போட்டி நடத்தப்படும் நிலையில், இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு அதிக பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. இதில் விளையாட தொடங்கும்போதே ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படுகிறது. இந்த ஆஃப்களுக்கு பிரபல கிரிக்கெட் வீரர்களும், சினிமா நடிகர்களும் விளம்பரம் செய்து வருகின்றனர்
இதில் தற்போது இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் விளையாடி வருகின்றனர். இந்த ஆஃப்களில் மொத்த போட்டியாளர்கள், குழுப்போட்டியாளர்கள், தனித்தனி போட்டியாளர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கேற்ப பணமும் வசூலிக்கப்படுகிறது.
இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த 11 வீரர்களை தேர்வு செய்து பணம் கட்டினால், அன்றைய போட்டியில், பணம் கட்டி தேர்வு செய்த விளையாட்டு வீரர்கள் எடுக்கும், ஒவ்வொரு ரன், கேட்ச், விக்கெட்டுக்கும் ஸ்கோர் வழங்கப்படும். இதன் அடிப்படையில் போட்டி முடிவடைந்த பின்னர் மொபைல் ஆஃப் மூலமாக வெற்றியாளர்கள் பட்டியல் வெளியாகும்.
இந்த போட்டிகளில் 20 ரூபாய் தொடங்கி 5 லட்சம் வரை பணம் செலுத்தி விளையாடலாம். இந்த நிலையில், இதுபோன்ற விளையாட்டுகளில் பிரபல மொபைல் செயலியான DREAM -11 மீது, பயனாளிகளை ஏமாற்றி மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாண்குமார் என்பவர், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகாரில், DREAM -11 ஆஃப்பில், முறைகேடாக ஒரே பெயர்களுடைய ஏராளமான நபர்களை போட்டிகளில் கலந்துகொள்வது வைத்து மற்றும் சொந்த நிறுவனத்தின் ஆட்களையே விளையாட வைத்து, இவர்களுக்கே முதல் பரிசு வழங்கி மோசடி செய்வதாக கூறியுள்ளார். நாள்தோறும் பொதுமக்களின் கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றப்படுவதாகவும், இதற்கு அவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா என்பது தெரியவில்லை என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார். இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தவும் கல்யாண்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?