திருச்சி சாரதாஸ் உரிமையாளர் காலமானார்... மக்கள் சோகம்

Apr 30, 2024 - 22:03
Apr 30, 2024 - 22:23
திருச்சி சாரதாஸ் உரிமையாளர் காலமானார்... மக்கள் சோகம்

திருச்சி மாநகரின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் சாரதாஸ் ஜவுளிக் கடையின் உரிமையாளர் மணவாளன் பிள்ளை, வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. 

திருச்சி மாவட்டத்தில் மிகப்பெரிய ஜவுளிக் கடையாக உள்ளது சாரதாஸ். ஐம்பது ஆண்டுகளாக மேலாக இயங்கிவரும் சாரதாஸ், திருச்சி மலைக்கோட்டை இருக்கும் என்.எஸ்.பி சாலையில் சிறிய கடையாக தொடங்கப்பட்டு, பெரும் அளவில் உயர்ந்ததாகும். திருச்சி மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பலரும் ஜவுளி எடுப்பதற்கு சாரதாஸுக்கு வருவதையே ஒவ்வொரு பண்டிகைக்கும் முக்கிய நிகழ்வாக கருதுவது வழக்கம். சாரதாஸை சுற்றியே அந்த வீதியில் பின்னாளில் பல ஜவுளிக் கடைகள் எழுந்தன.  குறைந்த விலையில் ஆடைகளை வாங்குவதற்கு இக்கடையை மக்கள் தேடி வருவது வழக்கம்.

இக்கடையின் உரிமையாளர் மணவாளன் பிள்ளை. இவர் திருச்சி மற்றும் சென்னையில் ஜவுளிக்கடையை வைத்து ஒரு மாபெரும் அடையாளத்தை உருவாக்கினார். இந்த நிலையில் கடையின் உரிமையாளர் மணவாளன் பிள்ளை, தினமும் ஜவுளி கடைக்கு வந்து காலை முதல் மாலை வரை கடையில் இருந்து பணிகளை கவனித்து வந்தார். 

கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக கடைக்கு வருவதை தவிர்த்து, ஓய்வில் இருந்தார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 30) மதியம் 3 மணியளவில் என்.எஸ்.பி சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் அவரது அலுவலகத்தில் அவர்  இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

அவரது மறைவை அடுத்து என் எஸ் பி சாலையில் உள்ள கடைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அவரது உடல் என்எஸ்பி சாலையில் உள்ள சாரதா கடையில் முன்பு வைக்கப்பட்டு, தொழிலதிபர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் அவர்களது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சாரதாஸ் உரிமையாளரின் மறைவு திருச்சி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow