78 ஆண்டுகளுக்கு பின் இந்திய வீரர்கள் அசத்தல் - கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான சாதனை!

Feb 27, 2024 - 20:35
Feb 27, 2024 - 20:38
78 ஆண்டுகளுக்கு பின் இந்திய வீரர்கள் அசத்தல் - கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான சாதனை!

இந்தியாவில் நடைபெறும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில், 10 மற்றும் 11ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய வீரர்கள் இருவரும் சதம் விளாசி சாதனை படைத்தனர்.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ரஞ்சிக்கோப்பையின் இரண்டாவது காலிறுதிப் போட்டி மும்பையில் நடைபெற்றது. மும்பை அணியும், பரோடா அணியும் மோதிய இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி 384 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மும்பை அணி வீரர் முஷீர் கான் இரட்டைச் சதம் விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய பரோடா அணி 348 ரன்கள் எடுத்தது. சஷ்வத் ராவத் [124], விஷ்ணு சோலன்கி [136] ரன்கள் எடுத்தனர்.

பின்னர், 36 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணி 337 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 10 விக்கெட்டுக்கு தனுஷ் கோடியன் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் இணைந்து பரோடா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தனுஷ் கோடியன் 129 பந்துகளில் [10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 120 ரன்களும், துஷார் தேஷ்பாண்டே 129 பந்துகளில் [10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்] 123 ரன்களும் எடுத்தனர்.

இருவரது அதிரடி சதத்தினால், மும்பை அணி 569 ரன்கள் குவித்தது. பின்னர், பரோடா அணி 3 விக்கெட்டுகளுக்கு 121 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக கூறியதை அடுத்து, காலிறுதிப் போட்டி சமனில் முடிவடைந்தது.

இந்த போட்டியில், தனுஷ் கோடியன் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் இணைந்து 10ஆவது விக்கெட்டுக்கு 232 ரன்கள் குவித்தனர். முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் 10 மற்றும் 11ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய வீரர்கள் சதம் விளாசுவது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்னதாக, 1946ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சந்து சர்வேத் மற்றும் ஷூத் பானர்ஜி இருவரும் சதம் விளாசி இருந்தனர். அதேபோல் பத்தாவது விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகப்பட்ச ஸ்கோர் இதுவாகும். சந்து சர்வேத் மற்றும் ஷூத் பானர்ஜி இருவரும் இணைந்து 249 ரன்கள் குவித்தனர். 1992ஆம் ஆண்டு ரஞ்சிக்கோப்பை போட்டியில், மும்பை அணிக்கு எதிராக அஜய் சர்மா மற்றும் மொனிந்தர் சிங் இருவரும் இணைந்து 233 ரன்கள் எடுத்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow