கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக சம்மன்! மார்ச் 4-ல் ஆஜராக உத்தரவு...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி மார்ச் 4-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தனியாரும் உரிமம் பெற்று மதுபானங்களை விற்க வழிசெய்யும் வகையில் மதுபானக் கொள்கையை கொண்டு வந்தது. ஆனால், இதில் ஊழல் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சில மாதங்களில் இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. இருப்பினும், இது தொடர்பான வழக்கை ஆம் ஆத்மியை விடாமல் தொடர்ந்தே வருகிறது.
இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. ஏற்கனவே இந்த குற்றச்சாட்டில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து 7 முறை சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால் அவர் ஒருமுறை கூட ஆஜராகாத நிலையில், 8-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மார்ச் 4-ம் தேதி கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகும் போது அமலாக்கத்துறை கைது செய்ய வாய்ப்புள்ளதால் அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜராவேன் என்று கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?