மகனை பள்ளியில் விட்டு வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
மயிலாடுதுறையில் மகனை பள்ளியில் விட்டு வீடு திரும்பிய பெண்ணின் ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை பகுதியைச்சேர்ந்தவர் முத்து.இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி ராஜேஸ்வரி.இவர்களது மகன் சந்தோஷ்(15) மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று காலை ராஜேஸ்வரி தனது மகன் சந்தோஷை பள்ளியில் விடுவதற்காக ஸ்கூட்டரில் மயிலாடுதுறைக்கு வந்துள்ளார்.
மகனை பள்ளியில் விட்டுவிட்டு அங்குள்ள ஏவிசி திருமண மண்டப சாலை வழியாக ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிச்சென்றுகொண்டிருந்தார்.அப்போது தென்னைமரச்சாலையில் ராஜேஸ்வரி திரும்பியபோது பின்புறம் அதிபயங்கர வேகத்தில் வந்த லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியிருக்கிறது.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேஸ்வரியின் லாரியின் பின்சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஸ்வரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கரூர் மாவட்டம் புன்னமசத்திரத்தைச்சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை நகர் பகுதியில் கனரக லாரிகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாகவும், இது குறித்து போலீசார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து போலீசார் “நகரின் பல பகுதிகளில் விபத்தை தடுக்கும் விதமாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் வேகத்தடையையும் பொருட்படுத்தாமல் வேகமாக இயக்கப்படும் வாகனங்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்
What's Your Reaction?