சித்திரை திருவிழாவில் ராட்டினம் அமைக்க லஞ்சம்... "தனியா கவனிக்க" சொன்ன பொறியாளர்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சித்திரை திருவிழாவில் ராட்டினம் அமைக்க லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

Apr 13, 2024 - 14:16
சித்திரை திருவிழாவில் ராட்டினம் அமைக்க லஞ்சம்... "தனியா கவனிக்க" சொன்ன பொறியாளர்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்

பரமக்குடியை அடுத்த பர்மா காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஆண்டுதோறும் பரமக்குடியில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் ராட்டிணம் அமைத்து தொழில் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ராட்டிணம் அமைப்பது தொடர்பாக தடையில்லா சான்று கேட்டு பரமக்குடி நீர்வளத்துறையில் கோட்டப்பொறியாளருக்கு மனு அளித்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து மணிகண்டன் உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பரமக்குடி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நன்கொடையும், பரமக்குடி பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை)க்கு ரூ.60,000 கட்டணமும் செலுத்தி அனுமதி பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மணிகண்டன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு செலுத்த வேண்டிய நன்கொடை மற்றும் கட்டணத்தை செலுத்திவிட்டு பரமக்குடி நீர்வளத்துறையின், கோட்ட உதவி பொறியாளர் கார்த்திகேயனை சந்தித்து  தடையில்லா சான்று சம்பந்தமாக கேட்டுள்ளார். 

அப்போது அவர் தடையில்லா சான்று வழங்க, அதிகாரிகளை 'தனியாக கவனிக்க' வேண்டும் என்றும், இதற்காக உதவி பொறியாளர் சம்பத்குமாரை பாருங்கள் என கூறியுள்ளார்.  அதன்படி, மணிகண்டன் உதவி பொறியாளர் சம்பத்குமாரை அணுகியபோது, அவர்  30 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார்.

 லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையில், புகார் அளித்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.30,000 பணத்தை மணிகண்டன் வழங்க சம்பத்குமார் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், கோட்ட உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்பட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow