கொடைக்கானலில் களைகட்டிய கோடை சீசன்.. எந்த பக்கம் திரும்பினாலும் ஹெவி டிராபிக்தான்.. பயணிகள் அவதி
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மூன்றாவது நாளாக கடும் போக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பண்டிகைக்கால விடுமுறை மற்றும் வார இறுதி நாள் என்பதால் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகளவில் காணப்படுகிறது.
தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறையையொட்டி கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை புரிந்தனர்.
இந்த நிலையில் வார இறுதி நாளான இன்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்தபாடில்லை. இதனால் பார்க்கும் இடமெல்லாம் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது வெப்பம் தணிந்து குளுமையான சீதோஷ்ண நிலை இருப்பதால் இதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக மூஞ்சிகல், அண்ணா சாலை, ஏரி சாலை, கான்வென்ட் ரோடு ,கல்லறை மேடு, சீனிவாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் இரு புறங்களிலும் சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் முக்கிய பிரதான சாலைகளில் போதிய காவலர்கள் பணியில் இல்லாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. அதேபோல உள்ளூர் மக்களும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கும் வேலைக்கும் செல்ல முடியாமல் மிகவும் சிரமடைந்து வருகின்றனர்.
இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்களில் கூடுதலான காவலர்களை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில் தற்போது காவல் பணியில் இருக்கும் காவலர்கள் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
What's Your Reaction?