அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதுக்கு தம்பி? தமிழிசை கேள்வி!
வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்துள்ள நிலையில், அதனை விமர்சித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இரண்டு கோடி உறுப்பினர்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கும் வகையில், இன்று (30.07.2025) காலை 11 மணி அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலியினை (MyTVK) என்பதை “வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்கிற பிரச்சார வாசகத்துடன் தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது. ஏற்கெனவே https://tvk.family என்ற இணையத்தளம் வாயிலாக பொதுமக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொள்ளும் நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இந்த செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்பது நாடகம்:
இதனை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவின் விவரம் பின்வருமாறு-
“டி.வி.கே ஆப் .. இன்று வெளியீடு.. தமிழ்நாட்டில் இனி ஆப்பிற்கும் ஆதரவு கிடையாது அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது.. ஓரணியில் தமிழ்நாடு என்கிற நாடகத்திற்கு மக்களின் ஆதரவு கிடையாது ஏனென்றால் இன்று இவர்கள் மக்கள் நலனில் இருந்து விலகி இருக்கிறார்கள். வெற்றி பேரணியில் தமிழ்நாடு நாடகத்திற்கு ஆதரவு கிடையாது. ஏனென்றால் இவர்கள் எப்போதுமே மக்களிடம் இருந்து விலகி இருந்தவர்கள். "அண்ணா "வழியில் செல்வதற்கு இன்னொரு கட்சி எதற்கு "தம்பி"? “ என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இனி மக்களோடு மக்களாக: விஜய் பேச்சு
தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், ”அடுத்து மதுரை மாநாடு.. மக்கள் சந்திப்பு.. பயணம்.. என இதுக்கப்புறம் தொடர்ந்து மக்களோட மக்களா இருக்கப் போறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
MyTVK செயலியினை தவிர்த்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கக்கூடிய 69 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் நேரில் சென்றும் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளை மேற்கொள்வார்கள் என தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?






