வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - சாலையை சூழ்ந்த வெள்ளம்
ஆற்றோர பகுதிகள் முறையான தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளாத நிலையில், வெள்ள நீரில் மூழ்கும் சாலையில் கடும் சிரமத்தோடு பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலையை சூழ்ந்த வெள்ளத்தால் நீரில் மூழ்கியபடி வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து நேற்று 6071 கன அடியும், இன்று காலை முதல் 3791 கன அடியும் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் மதுரை மாநகர் வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரை வைகை ஆற்றின் ஏவி மேம்பால தடுப்ணை அருகேயுள்ள யானைக்கல் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.இதனால் ஆற்றை ஒட்டிய சாலை முழுவதுமாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.இதனால் வைகை ஆற்று சாலையோரத்தில் இருந்து சிம்மக்கல் ஆரப்பாளையம் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நீரில் மூழ்கியபடி சிரமத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பைக்குகள் வெள்ள நீரில் சிக்கி பழுதடைவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி வெள்ள நீரில் நனைந்தபடி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பல மாதங்களாக மாநகராட்சி பகுதியில் ஆற்றோர பகுதிகள் முறையான தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளாத நிலையில், வெள்ள நீரில் மூழ்கும் சாலையில் கடும் சிரமத்தோடு பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வெள்ளநீரில் பைக்குகள் செல்லும்போது ஆடைகள் நனையாமல் இருக்க காலை உயர்த்தியபடி செல்லும் வாகன ஓட்டிகள் எதிரில் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து காவல்துறையினரும் இல்லாத நிலையில் கடும் சிரமத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள் செல்வதாகவும், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
What's Your Reaction?