மறைந்த நாகை எம்.பி செல்வராஜ் உடலுக்கு அரசு மரியாதை.. 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்
மறைந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜ், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர், சிகிச்சை பலனின்றி கடந்த மே 13ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள சித்தமல்லிக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், அவரது உடலுக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், நாகை நாடாளுமன்ற திமுக பொறுப்பாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய பூண்டி கலைவாணன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோரும் நேரில் வந்து மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல், அவரது இல்லத்தின் அருகே, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
What's Your Reaction?