பத்திரப்பதிவு கட்டண உயர்வு... மக்கள் தலையில் கட்டண சுமை.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்காக மட்டுமே தமிழ்நாடு அரசு செயல்படுவதால்தான் மக்கள் தலையில் அதிகமான கட்டணச் சுமை விழுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

May 14, 2024 - 15:02
பத்திரப்பதிவு கட்டண உயர்வு... மக்கள் தலையில் கட்டண சுமை.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!


தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு கட்டணங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், அண்மையில் 20 வகையான முத்திரைத்தாள் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, பத்திரப்பதிவுத் துறையில் அடிக்கடி கட்டணங்கள் உயர்த்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ரூ.5 ஆக இருந்த பத்திரப்பதிவு கட்டணத்தை ரூ.500 ஆகவும், ரூ.30 ஆக இருந்த கட்டணத்தை ரூ.1000 ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பதை குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல், கடந்த 2023-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை சுமார் 50% வரை உயர்த்தி வசூலிக்கத் தொடங்கிய திமுக அரசின் செயல்பாடு சட்ட விரோதமானது என்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், தீர்ப்பை மதிக்காமல், உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாகத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தையே வசூலித்து வந்தது. இதையடுத்து, இந்தாண்டு மார்ச் 6-ம் தேதி, 2017 ஆம் ஆண்டின் வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவிட்டும், திமுக அரசு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவைக் கண்டு கொள்ளாமல் உள்ளது. தற்போது, பத்திரப்பதிவு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தியிருப்பதன் மூலம், சாதாரண பொதுமக்கள் மீதான கட்டணச் சுமையை பல மடங்கு அதிகமாக்கியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். 

தற்போது, வழிகாட்டி மதிப்பை மீண்டும் உயர்த்த, திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது என்று கூறியுள்ள அண்ணாமலை, இத்தனை அதிகமான கட்டணச் சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதன் பின்னணி, திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் வருமானத்துக்குமானதாகத் தெரிகிறதே அன்றி, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து திமுகவுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார். 

ஆட்சி நடத்துவது பொதுமக்களுக்காகவே அன்றி, திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்தும் நிறுவனங்கள் லாபம் பார்க்கவும், அதில் கிடைக்கும் கமிஷன் மூலம், திமுகவினர் வருமானத்தைப் பெருக்குவதற்கும் அல்ல என்பதை திமுக அரசு உணர வேண்டும். முற்றிலும் அராஜகமான, அநியாயமான இந்த பத்திரப் பதிவு கட்டண உயர்வு அரசாணையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தி, 2017 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில்  வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow