பாலாற்றுக்கு பூட்டு... மணல் கொள்ளையை தடுக்க மக்கள் போட்ட கேட்டு...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்கும் வகையில், ஆற்றுக்கு செல்லும் சாலையில் கிராம மக்கள், இரும்பு கேட் அமைத்து அதற்கு பூட்டு போட்டுள்ளனர்.
வாணியம்பாடியை அடுத்த அம்பலூர், கொடையாஞ்சி, ஈச்சங்கால், தேவஸ்தானம், ஓடப்பேரி ஆகிய பகுதிகளில் உள்ள பாலாற்றில் அதிகளவில் மணல் கொள்ளை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பாலாற்றில் இருந்து மணல் அள்ளக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் சிலர் சட்டவிரோதமாக அப்பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், தேவஸ்தானம் மற்றும் ஈச்சங்கால் ஆகிய 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து மணல் கொள்ளையை தடுக்கும் விதமாக தேவஸ்தானம், மற்றும் ஈச்சங்கால் ஆகிய கிராமங்களின் வழியாக பாலாற்றிற்கு செல்லும் சாலையில் இரும்பு கேட் அமைத்து பூட்டு போட்டுள்ளனர்.
கிராம மக்களின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?