கோவில்களில் சரிவு தளம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
வசதி குறைவாக இருப்பது என மாற்றுத்திறனாளிகள் கூறுகிறார்களோ, அந்த கோவில்களில் அவர்களுக்கு உண்டான வசதிகளை விரைவில் செய்து தரப்படும்
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் எங்களால கோவில் கருவறையில் இருக்கிற சாமிவை சுலபமாக தரிசிக்க முடியவில்லை என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8,000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபால் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.கோவில் நகரமென்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாநகரில் உலக பிரசித்திப்பெற்ற பல்வேறு திருக்கோவில் தலங்கள் உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் சுலபமாக கருவறையில் உள்ள சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாங்கள் சுவாமி தரிசனம் செய்யும்போதும் சரி, சாமி தரிசனம் செய்து திரும்பியபோதும் சரி கஷ்டத்துடனே சென்று வருகிறோம் என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கூட்ட நெரிசலில் சிக்குவதும், கோவில்களில் உள்ள படிக்கட்டுகள் அங்குள்ள ஏற்றத்தாழ்வுகள் போன்ற இடங்களில் நாங்கள் படும் சிரமம் மிகவும் அதிகம். கோவிலுக்கு சென்று வந்தால் சாமி தரிசனம், மன அமைதி, போன்றவைகள் கிடைக்கும். ஆனால் எங்களுக்கு கோவிலுக்கு சென்று வந்தால் மன வலியும், கால் வலியும் தான் அதிகரிக்கும் என தங்களது மனவேதனைகளை மாற்றுத்திறனாளிகள் குமுறுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காக அனைத்து திருக்கோவில்களில் சக்கர நாற்காலி உள்ளது.இருப்பினும் இந்த சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு கோவில் கருவறையில் உள்ள சுவாமியை எளிதில் தரிசிக்க முடியாத நிலை உள்ளது.அதற்கு முக்கிய காரணமாக சக்கர நாற்காலியை இயக்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பாக ஆட்களை அமர்த்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் கருவறையில் அமைந்துள்ள சுவாமியை எளிதில் தரிசனம் செய்து திரும்புவதற்கு கைப்பிடியுடன் கூடிய சரிவு தலத்தை அமைத்து தரப்பட வேண்டும் என்பதே அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ‘குறிப்பாக எந்தக் கோவில்களில் வசதி குறைவாக இருப்பது என மாற்றுத்திறனாளிகள் கூறுகிறார்களோ, அந்த கோவில்களில் அவர்களுக்கு உண்டான வசதிகளை விரைவில் செய்து தரப்படும்’ என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?