ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்
ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட காரணத்திற்காக பல்கலைக்கழகத்தை எந்த பாகுபாடும் காட்டவில்லை. பட்டமளிப்பு விழாவை கூட நாங்கள் புறக்கணித்தது கிடைாது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த, தமிழ்நாடு ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டங்களை வழங்கி கவுரவித்தார். நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
பட்டமளிப்பு விழாவிற்கு முதல்வராக, பல்கலை வேந்தராக மட்டுமல்ல, கலைஞன் என்ற முறையில் வந்துள்ளேன். நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துருவுக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கியதில் பெருமை அடைகிறேன். சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் மிகவும் பொருத்தமான ஒன்று. சிவக்குமார் புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்ல, நல்ல ஓவியர். சிறந்த சொற்பொழிவாளர். கருணாநிதிக்கு நெருக்கமானவர்.
ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் நாங்கள் எந்த பாகுபாடும் காட்டவில்லை. இந்த பட்டமளிப்பு விழாவை கூட நாங்கள் புறக்கணிக்கவும் இல்லை. 2021ம் ஆண்டிற்கு இந்த பல்கலையை செழிப்பாக வளர்த்து இருக்கிறோம். இதுதான் நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு; இந்த மாண்பு தொடர வேண்டும். 2021ம் ஆண்டுக்கு பிறகு இந்த பல்கலை.,யில் நிறைய மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள்.
புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்து, அதிக நிதியை ஒதுக்கி, ஆராய்ச்சி மையம் உட்பட பல அமைப்புகளை உருவாக்க நிதி வழங்கினோம். ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் ஊதியம் மற்றும் நிர்வாக செலவிற்கான மானியத்தொகை ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வளையங்குளத்தில் கிராமிய கலை பயிற்சி பள்ளி அமைக்க அரசின் சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். ஏஐ மூலம் பலரும் பாடல்கள், இசைகள், ஓவியங்கள் என உருவாக்குகின்றனர். அதனால் நமக்கான வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று நீங்கள் யாரும் கவலைப்படக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
What's Your Reaction?

