அரசு மருத்துவமனையில் இப்படியா..? கால் முறிந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... குமுறும் உறவினர்கள்... நடந்தது என்ன?

அரக்கோணம் அருகே விபத்தில் கால் முறிந்த பெண்ணை X-Ray எடுப்பதற்காக, ஸ்ட்ரெச்சரில் வைத்து கடும் வெயிலில் சாலையில் கொண்டு சென்ற காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apr 21, 2024 - 16:47
அரசு மருத்துவமனையில் இப்படியா..? கால் முறிந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... குமுறும் உறவினர்கள்... நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. இவர் தனது இருசக்கர வாகனத்தில் நெமிலியை நோக்கி சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அமுதா அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 

இதனிடையே அரசு மருத்துவமனையில் இருக்கும் X-Ray மையம் செயல்படாததால், மருத்துவர்கள், தனியார் மையத்தில் X-Ray எடுத்துக் கொண்டு வர சொன்னதாக தெரிகிறது. மேலும் X-Ray எடுப்பதற்காக மருத்துவமனை நிர்வாகம், அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், கால் முறிவு ஏற்பட்ட பெண்ணை சுட்டெரிக்கும் வெயிலில் ஸ்ட்ரெச்சரில் வைத்துக் கொண்டு, வாகனங்கள் சென்று வரும் சாலையில், இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

பல கோடி செலவில் பெரிய பெரிய கட்டடங்களை கொண்ட அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில், X-Ray, ஸ்கேன் போன்ற முக்கிய மருத்துவ வசதிகள் கூட இல்லாமல், நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவது வேதனையாக இருப்பதாக கூறும் சமூக ஆர்வலர்கள், இதுகுறித்து ஏன் மாவட்ட நிர்வாகம் தலையிடுவதில்லை எனவும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow