டிட்வா புயல் : 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் : அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மீட்புகுழுக்கள் மாவட்டங்களுக்கு விரைவு
சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மீட்புக்குழு விரைந்துள்ளன.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேசிவருகிறோம்.
நேற்று என்னுடைய தலைமையில் இது தொடர்பாக கூட்டத்தை கூட்டி எச்சரிக்கை விடுத்துள்ளோம். அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளோம். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை உஷாராக கவனிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். சென்னையிலும் அதிக மழைப் பொழிவு இருக்கும் என்று சொல்கின்றனர். எல்லா இடங்களிலும் முகாம்கள், உணவுப் பொருட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் நிலைமையை கவனமாக கண்காணித்து வருகின்றனர். டெல்டா மாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்கிறார். அவர் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அவருக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை”. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
6 மாவட்டங்களுக்கு மீட்புகுழு விரைந்தது
டிட்வா புயல் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் வேண்டுகோளை அடுத்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
ஒவ்வொரு தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கும் 30 பேர் வீதம் மொத்தம் எட்டு குழுக்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு இரண்டு குழுக்கள் (60 பேர்), தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு தள்ளிவைப்பு
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசுத் தேர்வு இயக்ககத்தால் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 1991-1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு நாளை(நவ. 29, சனிக்கிழமை) அன்று நடைபெறவிருந்தது.
இந்நிலையில் டிட்வா புயலால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிச. 6 ஆம் தேதி, சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று “ரெட் அலர்ட்” விடு ராமநாதபுரம்,புதுக்கோட்டை,தஞ்சை,திருவாரூர்,நாகை,காரைக்கால் (புதுச்சேரி)
க்கப்பட்டுள்ளது.
சிவகங்கை,தூத்துக்குடி,அரியலூர்,மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி,நெல்லை,விருதுநகர்,மதுரை,திருச்சி,பெரம்பலூர்,கடலூர் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை 29-11-2025: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
What's Your Reaction?

