சேலம் சென்ற ஆளுநருக்கு வரவேற்பும், எதிர்ப்பும்-பின்னணி என்ன?
போராட்டத்தால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்றார். முன்னதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீசார் இன்று மீண்டும் சோதனை செய்தனர்.ஏற்கனவே பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் 6 இடங்களில் சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் முன்னிலையில் ஆட்சிக்குழு கூட்ட அரங்கில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஆளுநரை துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.தொடர்ந்து புகாருக்குள்ளான துணைவேந்தர் ஜெகநாதனுடன் சுமார் 25 நிமிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.ஆய்வு கூட்டம் முடிந்து ஆளுநர் ஆர்.என். ரவி விருந்தினர் மாளிகைக்கு மதிய உணவுக்கு சென்றார்.
முன்னதாக ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவர் அணி, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்பட 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். போராட்டத்தால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், பெரியார் பல்கலைக்கழகம் எதிரே ஆளுநரை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பல்வேறு கட்சியினர் அங்குள்ள தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் கலாட்டா செய்வதை தடுக்க கடைகள் அடைக்கப்பட்டது.
What's Your Reaction?