வெளியானது பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்...யார் யாருக்கு எந்தெந்த தொகுதி?
வரும் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் தேர்தல் அறிவிப்பு தேதி வெளியாகும் என என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் 2024 விரைவில் அறிவிக்கப்பட நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, 195 பேர் கொண்ட பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் 34 மத்திய அமைச்சர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 28 பெண்களும், 27 பட்டியலினத்தவர்களும், 10 பழங்குடியினர்களும், 57 ஓபிசி பிரிவினரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியிலில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் 51 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 24 பேரும், மேற்கு வங்கத்தில் 20 பேரும், குஜராத், ராஜஸ்தானில் தலா 15 பேரும், கேரளாவில் 12 பேரும், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அசாமில் தலா 11 பேரும், தெலங்கானாவில் 9 பேரும், டெல்லியில் 5 பேரும், உத்தரகாண்டில் 3 பேரும், கோவா, அந்தமான், திரிபுரா, டையூ - டாமனில் தலா ஒருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுவதாக வினோத் தாவ்டே தெரிவித்தார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்தி நகரிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், தற்போதைய மக்களவை தலைவர் ஓம்பிர்லா ராஜஸ்தானின் கோட்டாவிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடித்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய அமைச்சர்கள் கிரிண் ரிஜிஜு அருணாச்சலப் பிரதேசம் மேற்கு தொகுதியிலும், கஜேந்திர சிங் ஷெகாவத் ஜோத்பூரிலும், கிஷண் ரெட்டி செகந்திராபாத்திலும், ராஜீவ் சந்திர சேகர் திருவனந்தபுரத்திலும், முரளிதரன் ஆட்டிங்காலிலும் போட்டியிடுகின்றனர். விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா குணாவிலும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா போர்பந்தரிலும்,
சர்பானந்த சோனாவால் லக்கிம்பூரிலும், பூபேந்திர யாதவ் ஆல்வார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மலையாள நடிகரும் பாஜக நிர்வாகியுமான சுரேஷ் கோபி திரிச்சூரில் களமிறங்குகிறார். இதேபோல் பிரபல பாலிவுட் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஹேமாமாலினி உத்தரப்பிரதேசத்தின் மதுரா தொகுதியில் களம் காணுகிறார். மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் விதிஷா தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகளான பன்சூரி ஸ்வராஜ் டெல்லியிலும் போட்டியிடுகின்றனர்.
What's Your Reaction?