என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..?-ஆவணங்கள் எடுக்கக் குழந்தையை விட்டுச் சென்ற பெண்
மொழி பிரச்னை காரணமாக யாரிடம் விசாரிப்பது எனத் தெரியாமல் பரிதவித்து வந்துள்ளனர்.
பேருந்தில் கூட்டம் அதிகம் என்பதால் வீட்டுக்குச் சென்று ஆவணங்களை எடுக்க வேறு ஒரு பெண்ணிடம் குழந்தையை விட்டுச் சென்ற வடமாநில பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் தனது சொந்த ஊரான வத்தலகுண்டுக்கு செல்வதற்காகத் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்குக் கடந்த 15-ம் தேதி வந்துள்ளார். அப்போது இவரின் அருகே வந்து நின்ற 19 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் குழந்தையை செல்லம்மாளிடம் கொடுத்துத் தான் அருகில் உள்ள கழிவறைக்குச் சென்று வருவதாகத் தெரிவித்து விட்டுச் சென்றுள்ளார்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் குழந்தையின் தாய் வராததால் அதிர்ச்சடைந்த செல்லம்மாள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்தார். இதனை அடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தை அரசு மருத்துவமனைக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை விட்டுச்சென்ற தாய் குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஒரிசாவைச் சேர்ந்த தம்பதிக்குக் கடந்த 9-ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாகவும், 15-ஆம் தேதி அன்று குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்செல்லும் வழியில் அரசு வழங்கும் பிரசவ உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டி இருந்ததால் வீட்டிற்குச் சென்று தனது வங்கிக் கணக்கு புத்தகத்தை எடுத்து வரத் திட்டமிட்டார். எனினும் பேருந்தில் அதிக அளவிலான கூட்ட நெரிசல் இருப்பதால் குழந்தையை எடுத்துச் செல்லும் பொழுது சிரமம் ஏற்படும் என அங்கிருந்து பெண் பயணி ஒருவரிடம் தனது குழந்தையைக் கொடுத்துவிட்டு, வீட்டிற்குச் சென்று வங்கிக் கணக்கு புத்தகத்தை எடுத்து வந்துள்ளார்.ஆனால் வீட்டிற்குச் சென்று வரத் தாமதமானதால் தனது குழந்தை காணாமல் தவித்துள்ளார்.
மேலும் மொழி பிரச்னை காரணமாக யாரிடம் விசாரிப்பது எனத் தெரியாமல் பரிதவித்து வந்துள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயன்றபோது பேருந்து நிலையத்தில் கிடைத்த குழந்தை எனத் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு குழந்தை அவர்களுடையது என உறுதிப்படுத்தி குழந்தையை ஒப்படைத்தனர்.இச்சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?