மாம்பழ சின்னம் யாருக்கு: ராமதாசு வழக்கு பிப் 2-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணை
பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 2 ம் தேதி நடைபெற உள்ளது.
பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வரும் சூழலில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரியும், கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி உரிமை கோர முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது என்றும், சின்னம் ஒதுக்கீடு தொடராக தனக்கு தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், டில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கும் என உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் இதுநாள் வரை சின்னத்தை முடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், பிப்ரவரி 2 ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?

