கச்சத்தீவு விவகாரம்.. 2015ல் நடந்தது என்ன?... கேட்கிறார் ப.சிதம்பரம்

கச்சத்தீவு குறித்து 2015 மத்திய அரசு கொடுத்த கடித்தத்தைப் பற்றிக் கேட்டால், பாஜக தலைவர்கள் ஏன் நழுவுகிறார்கள் என்று கேள்வியெழுப்பி ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Apr 2, 2024 - 18:04
கச்சத்தீவு விவகாரம்.. 2015ல் நடந்தது என்ன?... கேட்கிறார் ப.சிதம்பரம்

கச்சத்தீவு பிரச்சனையில் உண்மையில் நடந்து என்ன என்பது குறித்து 2015 மத்திய அரசு கொடுத்த கடித்தத்தைப் பற்றிக் கேட்டால், பாஜக தலைவர்கள் ஏன் நழுவுகிறார்கள் என்று கேள்வியெழுப்பி ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு குறித்து பற்ற வைத்த நெருப்பு பல திசைகளில் பற்றி எரிகிறது. ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல்களை பற்றி நேற்று பேசிய அண்ணாமலை, 1974 ஆம் ஆண்டு காங்கிரசும், திமுகவும் திட்டமிட்டுத் தான் கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததாகவும், இதில் திமுகவின் பங்களிப்பும் இருக்கிறது என்றும் கூறினார்.

மேலும், கச்சத்தீவை கொடுத்த பிறகு, இந்தியாவின் எல்லை சுருங்கி இருக்கிறது. அதற்குக் காரணம் மாபெரும் துரோகம் செய்தது காங்கிரஸ், திமுகதான் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார் அண்ணாமலை. 

கச்சத்தீவு குறித்து பாஜக தலைவர்கள் பேசிவருவதைக் கண்டித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கச்சத்தீவு பிரச்சனையில் உண்மையில் என்ன நடந்தது என்று 27-1-2015 அன்று இந்திய அரசு தந்த கடிதம் தெளிவுபடுத்தியுள்ளது. அன்று பிரதமராக இருந்தவர் நரேந்திர மோடிதான். வெளியறவுத் துறையில் உயர் அதிகாரியாக ஜெய்சங்கர் இருந்தார்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ 27-1-2015 அன்று கொடுத்த கடிதத்தைப் பற்றிக் கேட்டால், பாஜக தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்? கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான காட்டமான அறிக்கைகளை வெளியிடும் பாஜக தலைவர்களுக்கு, இலங்கையில் வாழும் 25 லட்சம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் 10 லட்சம் இந்தியத் தமிழர்களைப் பற்றி கவலையில்லை போலத் தெரிகிறது. உங்கள் காட்டத்தை இலங்கையின் மீது காட்டி 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி் விடாதீர்கள்” என்றும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார் ப. சிதம்பரம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow