நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்: சட்டமன்ற தேர்தலால் தமிழ்நாட்டிற்கு லக் அடிக்க வாய்ப்பு?
நாளை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்திற்கு அதிக நிதி, புதிய திட்டங்கள் வர வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு 2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். பொதுவாக, விடுமுறை நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை என்றாலும், இம்முறை பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகும். இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், மத்திய பட்ஜெட் திட்டமிட்டபடி நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட் இதுவாகும். முன்னதாக 1999-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில், நாளை பிப்ரவரி 1-ந்தேதி 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக நாளை பங்குச் சந்தைகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பதன் மூலம் விலையைக் கட்டுப்படுத்த அரசு முயற்சி செய்யலாம் என்ற பரவலான எதிர்பார்க்க உள்ளது.விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 6,000 ரூபாய் நிதியுதவி 9,000 ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டிற்கு லக் அடிக்குமா?
தமிழ்நாட்டை பொறுத்தவரை, மத்திய துறைத் திட்டமாக அங்கீகரித்துள்ள சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதை போன்ற பணிகளை விரைவுபடுத்த நிதி ஒதுக்கீடு எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது. குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள இஸ்ரோவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளப் பணிகளுக்காக இந்த பட்ஜெட்டில் கணிசமான நிதி ஒதுக்கப்படலாம். விரைவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

